பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2019

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு திடீர் இட ஒதுக்கீடு தேர்தலுக்கான உத்தியே தவிர வேறல்ல

மாநிலங்களவையில் எளமரம் கரீம் சாடல்
புதுடில்லி, ஜன. 13- மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் பொருளாதார ரீதியாக பலவீனமானவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டமுன்வடிவு, ஒரு தேர்தல் உத்தியே தவிர வேறல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் நிறைவு நாளான வெள்ளிக் கிழமையன்று பொருளாதாரரீதியாக பலவீனமானவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்காகக் கொண்டுவரப் பட்ட அரசமைப்பு (திருத்தச்) சட்ட முன் வடிவின் மீது நடைபெற்ற விவாதத்தின்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எளமரம் கரீம் பேசியதாவது:
பொது வகையினராக இருப்பவர்களில் பொருளாதாரரீதியாகப் பலவீனமானவர் களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது தேர்தலுக்கான உத்தியே தவிர வேறல்ல.அடித்தட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளித்திடுவதில் அரசாங்கத்திற்கு எவ்வித மான அக்கறையும் கிடையாது. நாடாளு மன்றத்தின் கூட்டத்தொடர் முடியும் தருவாயில் அரசாங்கம் இம்முடிவினை எடுத்திருக்கிறது.வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே இதனைக் கொண்டுவந்திருக்கிறது.
மோடி அரசாங்கம் கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் படுதோல்வி அடைந் திருக்கிறது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை. இந்தப் பிரச்சினை மண்டல் கமிஷன் நாட்களிலிருந்தே விவாதத்தில் இருந்து வருகிறது. இத்தகையதொரு நட வடிக்கை தேவை என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கூறிவருகிறது.
எனினும், இந்தச் சட்டமுன்வடிவு தொடர்பாக அரசாங்கம் எந்தவிதமான கலந்தாலோசனையும் மேற்கொள்ளா மலேயே நம்முன்பாகக் கொண்டுவந்திருக் கிறது. குறிப்பாக, இதனால் பயனடை வோரைத் தீர்மானிப்பதற்கான வரன்முறை குறித்து இதில் கூறுகையில், ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் இதனால் பயனடைவார்கள் என்று கூறப்பட்டிருக் கிறது. எனவே இந்த ஒதுக்கீடு உண்மை யிலேயே வறிய நிலையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்குமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
ஜனவரி 8,9 தேதிகளில் நாடு முழுதும் தொழிலாளர் வர்க்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது. அவர்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 18 ஆயிரம் ரூபாயாக இருந்திட வேண்டும் என்பதாகும். அவ்வாறு அது ஒப்புக்கொள்ளப்பட்டால் அவர்களின் ஆண்டு வருமானம்2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயாக வரும். ஆனால் கெட்டவாய்ப்பாக அரசாங்கம் அதனை ஒப்புக் கொள்ள வில்லை. அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்திட மோடி அரசாங்கம் மறுத்துவருகிறது. தற்போது அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இழந்துவிட்ட மக்களின் ஆதர வைப் பெறுவதற்காக, இந்தச் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் பின்பற்றும் கொள் கைகள், வேலை வாய்ப்பை அதிகரிப்ப தற்குப் பதிலாக, இருக்கும் வேலை களையும் தொழிலாளர்கள் இழக்கும் விதத்திலேயே அமைந்திருக்கின்றன. சமீபத்தில் இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மய்யம் வெளியிட்ட அறிக்கையின்படி, பணமதிப்பிழப்பின் காரணமாக, ஒரு கோடிக்கும் மேலான வர்கள் வேலையிழந்துள்ளார்கள் என்று வெளிப்படுத்தியிருக்கிறது.தொழில்பிரிவுகளிலும், எந்திரமயமாக்கல், ரோபோக் கள் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு கருவிகள் மயமாக்கல் ஆகியவற்றின் காரணமாக வேலைவாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கின்றன. உண்மை நிலைமை இவ்வாறிருக்கையில், இந்த இடஒதுக் கீட்டின் மூலம் ஏழை மக்கள் எப்படிப் பயன் பெறுவார்கள்? இதுவேஎன் கேள்வி. ஏற்கெனவே தலித்துகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மூர்க்கத்தனமான நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக, ஏற்கனவே இருந்து வந்த இடஒதுக்கீட்டுப் பயன்கள் அரித்து வீழ்த்தப் பட்டிருக் கின்றன. தனியார் துறையில் இட ஒதுக்கீடு கிடையாது.
நிலைமை மாறாது
இந்தச் சட்டமுன்வடிவு கொண்டு வருவதற்கான நோக்கங்களும், காரணங் களும் என்பதன்கீழ், சமூகத்தில்பொருளாதார ரீதியாகப் பலவீனமானவர்கள் உயர்கல்வி நிலையங்களிலும், பொது வேலை வாய்ப்பிலும், தங்களின் வறிய நிலை காரணமாக, பங்கேற்பதிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப் பிடப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டமுன் வடிவு நிறைவேறுவதன் மூலம் அந்த நிலைமையை மாற்றிட முடியுமா? வறிய நிலையில் உள்ளவர்கள் மேலே வந்துவிட முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு என் னுடைய பதில் முடியாது என்பதேயாகும். நம்முடைய அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய சிற்பிகள், நம் முந்தைய தலைவர்கள் அனைவருமே இடஒதுக் கீட்டுக் கொள்கையை உருவாக்கிய சமயத் தில், இந்த இடஒதுக்கீட்டின் மூலமாகவே சாதிய ஒடுக்குமுறைக்கு அல்லது இல்லா மைக்கு முற்றுப்புள்ளி வைத்திட முடி யாது. எனவே, இதனுடன் சேர்த்து, நிலச் சீர்திருத்தங்கள், பொருளாதாரச் சீர்திருத் தங்கள் ஆகியவையும் தேவை. நம் ஆட்சி யாளர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? நம் நாட்டின் நிலைமை இன்று எவ்வாறிருக் கிறது?
உதாரணமாக கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள். மனித வளர்ச்சி அட்ட வணையில் இன்றைய தினம் கேரள முதலாவது இடத்தில் இருக்கிறது. கேரளாவில் உள்ளவர்களின் ஆயுள் காலம் 75 வயதாகும். நாட்டின்சராசரி என்பது 64. எழுத்தறிவு என்பதும் கேரளாவில் உச்சத்தில் இருக்கிறது. குழந்தை இறப்பு விகிதம் என்பதும் கேரளாவில் மிகவும் குறைவு. அவர்களின் வாழ்க்கை நிலை மைகள் என்பது முன்னேறிய நாடுகளில் உள்ளவர்களுக்கு இணையாக இருக்கிறது. எப்படி இதனை நாங்கள் எய்தினோம்? இவை அனைத்தையும் இடஒதுக்கீட்டின் மூலமாகநாங்கள் எய்திடவில்லை. நாங்கள் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்திருக்கிறோம்.
கேரள அரசாங்கம் 1957இலேயே நிலச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. பொதுக் கல்வி அமைப்பை வலுப்படுத்தி வளர்த்தெடுத்தது. பொது விநியோக முறையை வளர்த்தெடுத்தது. தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தது. தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்தியது. பெண்களுக்கு அதிகாரங்களை வழங்கியது. நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை வலுப்படுத்தியது. இத்தகைய கொள்கைகள் தான் கேரளாவை வளர்த்தது.
ஆனால் நாட்டின் இதர மாநிலங்களின் நிலைமை என்ன? நம் மக்களில் பெரும் பான்மையோர் மிகவும் வறியநிலையில் இருப்பதற்கு, ஆட்சியாளர்கள் கடைப் பிடித்து வரும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் கொள்கைகள்தான் காரண மாகும்.
நோக்கம் நிறைவேறாது
உலகில் உள்ள 189 நாடுகளில் 130ஆவது இடத்தில்இந்தியா இருப்பதாக மனித வளர்ச்சி அட்டவணையின் அறிக்கை கூறு கிறது. பாஜக ஆட்சிக்காலத்தில் நாட்டில் கார்ப்பரேட்டுகளும், வர்த்தக முதலை களும்தான் வளர்ந்திருக்கிறார்களே தவிர ஏழைகள் அல்ல. இவர்களின் ஆட்சியில் புதிதாக 17 பில்லியனர்கள் உருவாகி இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை இப்போது101 ஆகும். அதே சமயத்தில் நாட்டில் பெரும்பான்மை மக்கள் ஒரு நாளைக்கு 32 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு செய்யக்கூடிய நிலையில் இருக் கிறார்கள். இந்தியாவில் பில்லியனர்களின் வருமானம் 2017இல் 4,891 பில்லியன் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நாட்டின் செல்வங்களில் 73 சதவீதத்தை நாட்டிலுள்ள 1 சதவீதத்தினர் பெற்றிருக்கிறார்கள். ஆனால் 67 கோடி இந்தியர்கள் - மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் - தங்கள் வருமானத்தில் 1 சதவீத உயர் வைத்தான் பார்த்துள்ளார்கள். இதுவே நாட்டின் நிலை. எப்படி நாம் ஏழைகளின் வாழ்க்கையை உயர்த்தப்போகிறோம்? இந்தச்சட்டமுன்வடிவை கொள்கை யளவில் நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், இது அதன் நோக்கத்தை நிறைவேற்றிடாது. இந்த அரசாங்கத்திற்கும் இது தெரியும். இது நீதிமன்றத்தில் நிலைக்காது என்பதும் அதற்குத்தெரியும். அதைப்பற்றி அவர் களுக்குக் கவலையில்லை. வரவிருக்கும் தேர்தலில் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்து வதற்காகவே இதனைக் கொண்டு வரு கிறார்கள். ஆனால் நீங்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும். கடந்தநான்கரை ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும்.
இவ்வாறு எளமரம் கரீம் கூறினார்.
(நன்றி: தீக்கதிர், 12.01.2019)
- விடுதலை நாளேடு, 13.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக